நிறுவனத்தைப் பற்றி

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனம். இஃது உலகளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப் பெற்றுள்ள உயராய்வு நிறுவனமாகும். 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. 2012ஆம் ஆண்டு மே முதல், பாலாறு இல்லத்தில் இயங்கி வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இடமாற்றம் செய்யப்பட்டு, தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இந்நிறுவனத்தின் புதிய வளாகம் (பெரும்பாக்கம், சென்னை) 12.01.2022 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களால், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப் பெற்று, சிறப்பாகச் செயலாற்றி வருகின்றது.

தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகுணரச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. அறிஞர்களின் ஒருமித்த கருத்திற்கிணங்கச் செம்மொழித் தமிழின் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. தொன்மைக் காலம் தொடங்கிக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையுள்ள செம்மொழித் தமிழை மையப்படுத்தி செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் நன்கு புலப்படுத்தும் நோக்கில், உடனடியாகச் செயற்படுத்த வேண்டிய பத்து முதன்மைத் திட்டப்பணிகள் வகுக்கப்பெற்றுள்ளன.

  • பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு
  • பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல்
  • வரலாற்று முறைத் தமிழ் இலக்கணம் வகுத்தல்
  • தமிழின் தொன்மை – பன்முக ஆய்வு
  • தமிழ் வழக்காற்றாய்வு
  • தமிழும் பிறமொழிகளும்
  • பழந்தமிழ் ஆய்வுக்கான மின்நூலகம்
  • இணையவழிச் செம்மொழித் தமிழ்க் கல்வி
  • பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்
  • பழந்தமிழ்க் காட்சிக் குறும்படங்கள்

மேலும் >> www.cict.in